Monday, December 17, 2012

004-உத்தராயணம், தட்சிணாயனம், ருது, வாரம், திதி, நட்சத்திரம்


பஞ்சாங்க நுணுக்கங்கள்- 

வருடங்களும், மாதங்களும், உத்தராயணம், தட்சிணாயனம், ருது, வாரம், திதி, நட்சத்திரம்


கடந்த அத்தியாயத்தில் ஜோதிட கலைக்கு அடிப்படையான பஞ்சாகத்திற்கே அடிப்படையாக உள்ள வருடம், மாதம் இவைகளைப் பற்றி கவனித்தோம். சூரியனின் இயக்கத்தை அடிப்படை யாகக் கொண்டது ‘சௌரமானம் எனவும், சந்திர இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டது ‘சந்திரமானம் எனவும், மாநிலத்திற்கு மாநிலம், மதத்திருக்கு மதம் வருட, மாத ஆரம்பம் வித்தியாசப்படுகின்றன எனவும், தமிழர்களின் வருட, மாதங்களையும், கேரளா கொல்லம் ஆண்டு மற்றும் மாதங்களையும் கண்டோம். 

இனி உத்தராயணம், தட்சிணாயனம்,ருது,வாரம்,திதி,நட்சத்திரம் ஆகியவைகளைப் பார்ப்போம்.
  
'உத்தர்' என்றால் வடமொழியில் வடக்கு என்று பொருள். 'அயனம்' என்றால் வழி என்று பொருளாகும். சூரிய பகவான் தென்திசையிலிருந்து வடதிசை நோக்கி பயணம் செய்யும் காலமே உத்தராயணம் எனப்படும். தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி ஆகிய ஆறு மாதங்களும் உத்தராயண காலமாகும். நம்முடைய ஆறு மாத காலம் தேவர்களுக்கு பகல் பொழுதாகும். உத்தராயணம், தட்சிணாயனம் ஆகிய இரு அயன காலங்களில் உத்தராயணம் மிகவும் புனிதமான காலமாகும்.

பாரதப் போரில் பீஷ்மர் உடல் முழுவதும் அர்ஜுனன் எய்த அம்புகள் ஒரு அங்குலம் இடை வெளிகூட இல்லாமல் பாய்ந்திருக்க, கீழே சாய்ந்த பீஷ்மர் உடனே மரணம் அடையவில்லை. தான் விரும்பினால் மட்டுமே சாகக் கூடிய 'இச்சா மிருத்யு' என்னும் வரத்தை பீஷ்மர் தனது தந்தையாகிய சந்தனுவிடமிருந்து பெற்றிருந்தார். பீஷ்மர் அனுமதி கொடுக்காவிட்டால் மரணம் கூட அவரை அணுக முடியாது. இதனை உபயோகப் படுத்தி மரணத்தை உடனே தன்னை நெருங்க விடாது தடுத்திருந்தார். ஏனென்றால் பாரதப்போர் மார்கழி மாதம் தட்சிணாயன காலத்தில் நடைபெற்றது.

இக்காலத்தில் மரணம் அடைந்தால் மறுபிறவி உண்டு என்பதால், அம்பு படுக்கையில் இரத்தம் சொட்டச் சொட்ட உத்தராயண காலம் ஆரம்பிக்கும் வரை தனது உயிரை விடாமல் நிறுத்தி வைத்து, உத்தராயண காலம் தை மாதம் 1 -ஆம் தேதி ஆரம்பமானவுடன் தன்னுயிரை நீத்தார். அவர் தட்சிணாயன காலத்தில் இறந்தால் மீண்டும் மறுபிறவி எடுக்க வேண்டி வரும் என்றே இவ்வாறு செய்தார் என்று மஹாபாரதத்தில் விளக்கப் பட்டுள்ளது.  

இதிலிருந்தே இந்த உத்தராயண காலம் எவ்வளவு புனிதம் வாய்ந்தது என்பது தெளிவாகும். தை மாதம் 1 -ஆம் தேதியன்று உத்தராயணம் ஆரம்பிப்பதைதான் 'தை பிறந்தால் வழி பிறக்கும்' என்று முன்னோர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

தட்சிணாயனம்:-


'தட்சண்' என்றால் வடமொழியில் தெற்கு என்று பொருள். 'அயனம்' என்றால் வழி. அதாவது சூரிய பகவான் வடதிசையிலிருந்து தென்திசை நோக்கி பயணம் செல்லும் காலமே தட்சிணாயன காலமாகும். ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி ஆகிய ஆறு மாதங்கள் தட்சிணாயன காலமாகும். ஆடி 1 -ஆம் தேதியன்று தட்சிணாயனம் ஆரம்பமாகும். தட்சிணாயன காலமான ஆறு மாத காலம் தேவர்களுக்கு இரவுப் பொழுதாகும். மார்கழி மாதமே தேவர்கள் படுக்கையில் இருந்து விழித்தெழும் காலமாகும். அதன் காரணமாகத்தான் அந்த மாதம் முழுவதும் மக்கள் கோவில்களில் பஜனை பாடி அந்தத் தேவர்களை ஆராதனை செய்து வழி படுகிறார்கள்.

இராவண போர், மகாபாரதப் போர், இரண்யவதம் ஆகிய இம்மூன்றும் இந்த தட்சிணாயன காலத்தில்தான் நடைபெற்றது. இராவண வதம் ஆடி மாதமும், ஈரானிய வதம் புரட்டாசி மாதமும், பாரதப் போர் மார்கழி மாதமும் நடைபெற்றது. உத்தராயனமும், தட்சினாயனமும் சேர்ந்த நம்முடைய ஓராண்டானது தேவர்களுக்கு ஒரு நாளாகும். இந்த உத்தராயணத்தையும், தட்சிணாயனத்தையும் அதற்குரிய தமிழ் மாதங்களையும் ராசிகளையும் காட்டும் படமானது இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. தை மாதமானது மகர ராசிக்குரிய மாதமாகும். சூரிய பகவான் உத்தராயண காலம் ஆரம்பிக்கும் தை மாதம் 1 -ஆம் தேதியன்று மகர ராசியில் நுழைகிறார். எனவே உத்தராயண கால ஆரம்பம் "மகர சங்கராந்தி" என்று அழைக்கப் படுகிறது.    

உத்தராயணம், தட்சினாயனத்தைக் காட்டும் படம்:-


இந்த படத்தில் அடைப்புக் குறிகளுக்குள் அந்தந்த மாதங்களுக் உரிய ராசிகள் கொடுக்கப்பட்டு உள்ளன. சித்திரை 1 ஆம் தேதியும், ஐப்பசி 1 ஆம் தேதியும் விஷு புண்ணிய காலம் என்று அழைக்கப் படுகிறது.  

ருது:-

ருது என்றால் பருவம் என்று பொருள். நம் பாரத நாட்டில் ஒரு வருடமானது ஆறு பருவங்களாகப் பிரிக்கப்பட்டு உள்ளது. இரண்டு மாதங்கள் கொண்டது ஒரு பருவ மாகும். தட்பவெட்ப நிலையைப் பொருத் தும், காற்று, மழையைப் பொருத்தும் இந்தப் பருவங்கள் பிரிக்கப்பட்டு அதற்குப் பெயரிடப் பட்டுள்ளது. இந்த பருவங்களும் அதற்குரிய மாதங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

                               
பருவம்                                                      மாதங்கள்
1)
வசந்தருது (இளவேனிற்காலம்) ..............................   சித்திரை, வைகாசி
2)
கிரீஸ் மருது (முதுவேனிற்காலம்)............................ஆனி, ஆடி.
3 )
வருஷருது (கார் காலம்)............................................ஆவணி, புரட்டாசி.
4 )
சரத்ருது (கூதிர் காலம்)............................................   ஐப்பசி, கார்த்திகை.
5 )
ஹேமந்தருது (முன் பனிக் காலம்) .......................    மார்கழி, தை.
6 )
சசிருது (பின்பனிக் காலம்)......................................    மாசி, பங்குனி.

வாரம்:-  வாரம் என்றால் கிழமை என்று பொருள். ஒவ்வொரு கிழமைக்கும் ஒரு கிரகம் அதிபதியாக உள்ளது. அதாவது அந்த கிரகமானது அந்த கிழமையை ஆட்சி செய்கிறது என்று அர்த்தமாகும். வரமும் அதற்குரிய கிரகமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

                           
வாரம்                                           உரிய கிரகம்
ஞாயிற்றுக் கிழமை .....................................சூரியன்.
2 .
திங்கட்கிழமை...............................................சந்திரன்.
3 .
செவ்வாய்க்கிழமை ......................................செவ்வாய்.
4 .
புதன்கிழமை..................................................புதன்.
5 .
வியாழக்கிழமை............................................வியாழன்.
6 .
வெள்ளிக்கிழமை...........................................வெள்ளி.
7 .
சனிக்கிழமை.................................................சனி.

ஜோதிடத்தில் காணும் நவக் கிரகங்களில் ராகு, கேது ஆகிய இரு கிரகங்கள் நிழற் கிரகங்கலாதளால் இதற்கு கிழமைகள் கிடையாது. ராகுவுக்கு உரிய கிழமை ஞாயிற்றுக் கிழமை என்றும், கேதுவுக்கு உரிய கிழமை திங்கட்கிழமை என்றும் சில ஜோதிட நூல்கள் கூறுகின்றன.

திதி:-  திதி என்பது ஆகாயத்தில் சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையே உள்ள தூரமாகும். அமாவாசையன்று சூரியனும், சந்திரனும் சேர்ந்து இருப்பார்கள். பௌர்ணமி அன்று இருவரும் நேர் எதிராக 180 டிகிரி தூரத்தில் இருப்பார்கள். அதாவது சூரியன் இருந்த ராசியில் இருந்து எழ்ஜாவது ராசியில் சந்திரன் இருப்பார். விளக்கம் கீழே காண்க.
 
சூரியனிலிருந்து ஒவ்வொரு நாளும் சந்திரன் எவ்வளவு தூரம் விலகிச் சென்றுள்ளார் என்பதை குறிப்பதே திதியாகும். ஒரு திதிக்கு 12  (டிகிரி) பாகையாகும். இந்தத் திதி என்ற சொல்லே திரிந்து 'தேதி' என்று வழங்கலாயிற்று. அமாவாசையன்று சேர்ந்து இருக்கும் சூரியனும் சந்திரனும் பிரதமை அன்று பிரிந்து பின்னர் மீண்டும் சேருவதற்கு 30 நாட்களாகும். இந்த 30 நாட்களும் 30  திதிகளாகும்..


இந்த முப்பது திதிகளில் பௌர்ணமிக்கும், அமாவாசைக்கும் மட்டுமே பெயர் உண்டு. மற்றவைகள் ஒன்று, இரண்டு, மூன்று என வடமொழிச் சொல்லால் அழைக்கப்படுகின்றன. வடமொழிச் சொல்லிளிருது இவைகளுக்குப் பெயர்கள் எப்படி உண்டானது என்பது பற்றி விவரம் இங்கு கொடுக்கப் பட்டிருக்கின்றது.

எண்/திதி :1)ஏகம்(ஒன்று)/பிரதமை, 2)துவந்தம்(இரண்டு)/துதியை, 3)திரயம்(மூன்று)/திருதியை, 4)சதுர்(நான்கு)/சதுர்த்தி, 5)பஞ்சமம்(ஐந்து)/பஞ்சமி, 6)ஷட்(ஆறு)/சஷ்டி, 7)சப்த(ஏழு)/சப்தமி, 8)அஷ்ட(எட்டு)/அஷ்டமி, 9)நவ(ஒன்பது)/நவமி, 10)தசம்(பத்து)/தசமி.
இங்கே முதலாவது திதிக்கு பிரதமை என்று பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. வட மொழியில் “பிரதம என்றால் “முதலாவதுஎன்று பொருள். “ஏகம் என்றால் ஒன்று என்று பொருள். திதிகளில் பிரதமை முதலாவது திதியாதலால் இங்கு ஏகம் என்ற சொல்லுக்குப் பதிலாக பிரதம என்ற சொல் பிரயோகப்படுத்தப் பட்டுள்ளது.

பத்து திதிகளுக்கு மேல் வரக்கூடிய திதிகளான ஏகாதசி, துவாதசி, திரயோதசி, சத்ர்த்தசி ஆகிய திதிகளுக்கு எப்படி பெயர் ஏற்பட்டது என்று காண்போம்.
1)    ஏகம்         + தசம் ( 1 + 10 )  = ஏகாதசி,
2)    துவந்தம் + தசம்  ( 2 + 10) = துவாதசி,
3)     திரயம்     + தசம் (3 + 10 )   = திரயோதசி,
4)     சதுர்          + தசம்  (4 + 10)   = சதுர்த்தசி


இந்த பதினான்கு திதிகளில் அமாவாசைக்கு மறுநாள் ஆரம்பித்து பௌர்ணமிக்கு முதல்நாள் முடியும் திதிகள் சுக்லபட்ச திதிகள் அல்லது வளர்பிறை திதிகள் என்றும், பௌர்ணமிக்கு மறுநாள் ஆரம்பித்து அமாவாசைக்கு முதல் நாள் முடியும் திதிகள் கிருஷ்ணபட்ச திதிகள் அல்லது தேய்பிறை திதிகள் என்றும் அழைக்கப் படுகின்றன.
வளர்பிறை திதிகள்......14 + தேய்பிறை திதிகள்......14 + பௌர்ணமி...1 + அமாவாசை.....1 = ஆக திதிகள் மொத்தம்....30.  வடநாட்டில் இந்த முப்பது திதிகள் கொண்டதே ஒரு மாதமாக கணக்கில் எடுத்துக் கொள்ளப் படுகிறது.

நட்சத்திரம்:- வாரம், திதி, நட்சத்திரம், லக்னம், அமிர்தவேளை இவைகளில் நட்சத்திரமே மிகவும் முக்கியமானதாகும். எந்த ஒரு காரியம் செய்வதற்கும் நட்சத்திர சுத்தம் மிக முக்கியமானதாகும். இந்த நட்சத்திரங்கள் மொத்தம் 27 ஆகும். ஒரு நட்சத்திரத்திரத்திற்கு 13 பாகை (டிகிரி) 20 கலை (வினாடி) ஆகும். 27 நட்சத்திரத்திற்கும் மொத்தம் (27 X 13’ 20”) =360 ௦கலையாகும். இந்த 27 நட்சத்திரங்கள் கீழே கொடுக்கப் பட்டுள்ளன.  

1.அசுபதி, 2.பரணி, 3.கார்த்திகை, 4.ரோகினி, 5.மிருகசீரிஷம், 6.திருவாதிரை, 7.புனர்பூசம், 8.பூசம், 9.ஆயில்யம், 10. மகம், 11. பூரம், 12. உத்திரம், 13. ஹஸ்தம், 14. சித்திரை, 15. சுவாதி, 16. விசாகம், 17. அனுஷம், 18. கேட்டை, 19. மூலம், 20. பூராடம், 21. உத்திராடம், 22. திருவோணம், 23. அவிட்டம், 24. சதயம், 25. பூரட்டாதி, 26. உத்திரட்டாதி, 27. ரேவதி.

ஜோதிடக் கலையில் மிகவும் முக்கிய பங்கு வகிக்கும் இந்த நட்சத்திரங்களை அடுத்த அத்தியாத்தில் விரிவாகக் காண்போம்.  ..மேலும் பயணிப்போம் வாருங்கள்...அன்பன் கே எம் தருமா....

No comments:

Post a Comment